No icon

உயிர்த்த ஆண்டவரின் பாதையில்...  ஒரு விசுவாசத் தேடல் - 11.04.2021

உயிர்த்த ஆண்டவரின் பாதையில்...  ஒரு விசுவாசத் தேடல் - அருள்முனைவர். ஜோமிக்ஸ், பாளை

முன்னுரை
“கிறிஸ்துவையும் அவர் தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய விரும்புகிறேன்... அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்தெழ இயலும்.” (பிலி 3:10,11). தமஸ்கு செல்லும் சாலையில் உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த புனித பவுல் இந்த உயிர்ப்பின் இறை அனுபவத்தை ஆழப்படுத்துவதற்காக பதினான்கு ஆண்டுகள் அரேபியா பாலைவனத்தில் அமைதியில் ஆழ்ந்தும் (கலா 1:17; 2:1), தொடர்ந்து உயிர்த்த இயேசுவின் அனுபவத்தில் வளர்ந்தும், பல ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுகிறார். புனித பவுலைப் பொறுத்தமட்டில், கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை (உரோ 14:8,9). ஆகவேதான் “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லையென்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கும் நற்செய்தியும் பொருளற்றதாய் இருக்கும்" (1கொரி 15:14) என்பது பவுலின் ஆழ்ந்த நம்பிக்கை.
“என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்” (யோபு 19:25) என்னும் கூற்றுக்கு வலுசேர்க்கும் விசுவாச அறிக்கைதான் இயேசு உயிர்த்தெழுந்தார் என்னும் நம்பிக்கையாகும். ஆயினும் இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு மறைபொருள் கருத்தாகும். உயிர்த்த இயேசுவை மாட்சிமைக்குரிய உடல் கொண்டவர் என்று புதிய ஏற்பாடு விளக்குகிறது. அதாவது, மனிதனாய் வாழ்ந்த இயேசுவின் உடலுக்கும் உயிர்த்தெழுந்த இயேசுவின் உடலுக்கும் வேறுபாடுகள் உள்ளன. மனிதனாய் வாழ்ந்தபொழுது இயேசு பல ஊர்களுக்கும் நகரங்களுக்கும் நடந்து சென்றார். ஆனால், உயிர்த்தெழுந்த உடல் கொண்டபொழுது பூட்டிய கதவுகளுக்கு உள்ளே புகுந்தும் வருகிறார்; தொலைதூரத்தில் உள்ள நகரத்தில் நொடிப் பொழுதில் தோற்றம் தருகிறார். மனிதனாய் உடலெடுத்த இயேசுவை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால், உயிர்த்த இயேசுவை அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. உயிர்த்த இயேசுவை எங்கே காண்பது? எப்படி காண்பது? என்பது ஒரு விசுவாசத் தேடல் ஆகும். நற்செய்தி நூல்களில் இயேசுவின் உயிர்ப்பைப் பற்றிய நிகழ்வுகளின் அடிப்படையில் உயிர்த்த இயேசுவின் தடயங்களை/ அடையாளங்களை சிந்தனையுடன் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
1.கலிலேயாவில் உயிர்த்த இயேசு
இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருட்களுடன் பெண்கள் பலர் கல்லறைக்குச் சென்றார்கள். அங்கேதான் அவர்களுக்கு ஆச்சரியம் ஊட்டும் நிகழ்வு நடந்தது; செய்தி கிடைத்தது. வெண்ணிற தொங்கலாடை அணிந்த இளைஞர் (வானதூதர்) அப்பெண்களிடம் “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்... உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னதுபோலவே அவரை அங்கே காண்பீர்கள் எனச் சொல்லுங்கள் என்றார்” (மாற் 16:6-7).
இயேசுவின் உடலை வைத்தக் கல்லறை வெற்றுக் கல்லறையாய் மாறிப்போனது. உயிர்த்த இயேசுவைக் காணவேண்டுமெனில் கலிலேயாவுக்குச் செல்லுமாறு நாம் அறிவுறுத்தப்படுகிறோம். (யோ1:46)-ல் நத்தனியேல், நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ என்றுக் கேட்டார். இந்த நாசரேத்து கலிலேயாப் பகுதியில்தான் இருக்கிறது. (லூக் 13:1)-ல் பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்துக் கொன்றான் என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் கலிலேயா என்பது அந்நாளில் யூதர்களுக்கு கலகக்காரர்களின் கோட்டையாக, புரட்சியாளர்களின் பூமியாக இருந்துள்ளது. அதாவது, பிரச்சனைக்குரியவர்கள் வாழ்ந்த இடம்தான் கலிலேயா ஆகும். உயிர்த்த இயேசுவை காண வேண்டுமாயின் நாமும் கலிலேயாவுக்குச் செல்ல வேண்டும். இதையே உருவகமாகச் சொல்வதென்றால் அதாவது பிரச்சனைகள், குழப்பங்கள், கஷ்டங்கள் நிறைந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே தான் உயிர்த்த இயேசுவை நாம் காணமுடியும். இன்று நமது குடும்பங்கள், நாம் வசிக்கும் தெருக்கள், நாம் பணிபுரியும் இடங்கள்... பங்குகள், இயக்கங்கள், அமைப்புக்கள் அனைத்தும் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கின்றன. பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கிவிடாமல் ஈடுபாட்டுடன் உழைக்கும்போது உயிர்த்த இயேசு அங்கே பிரசன்னமாகிறார். நமது பேராட்டப் பயணங்களில் நமக்கு முன்பாகவே இயேசு பிரசன்னமாய் இருக்கிறார். நம்மிடம் அவர் விரும்புவது ஈடுபாடு ஒன்றேதான். ஈடுபாட்டில்தான் இறையாட்சி மலரும்.
2. தோட்டக்காரரில் உயிர்த்த இயேசு
யோவான் நற்செய்தி 20:11-18 முடிய உள்ள நிகழ்வில் மகதலா மரியாவுக்கு உயிர்த்த ஆண்டவர் காட்சி தரும் நிகழ்வை வாசிக்கிறோம். இயேசுவைத் தேடிவந்த மரியாவுக்கு தோட்டக்காரர் உருவில் இயேசு நிற்கிறார் என்பது தெரியவில்லை. அவரிடமே ஐயா! நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன் என்றார். மனுவுரு எடுத்த இயேசுவோடு மிகவும் நெருங்கி பழகியிருந்தும் இப்பொழுது அவர் உயிர்த்துள்ளதால் அவரை அடையாளம் கண்டுகொள்ள மரியாவால் முடியவில்லை. உயிர்த்த இயேசுவை தோட்டக்காரர் போன்ற ஏழைகள், சாமானியர்கள், தொழிலாளிகள், அன்றாடங் காய்ச்சிகள், நம்மிலும் தாழ்ந்தோரில் காணவேண்டும் என்று இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. உயிர்த்த இயேசு இவர்களின் வடிவில்தான் இன்று தோற்றம் அளிக்கிறார். (1 அரச 10: 1-13)-இல் பேரரசர் சாலமோனைச் சந்திக்க சேபா நாட்டு அரசி வருகிறார். சாலமோனைப் பற்றிப் பெருமையாக கேள்விப்பட்டிருந்தும் அவர் நம்பவில்லை. ஆனால், நேரில் வந்து பார்த்தபொழுது தான் இங்குள்ளவற்றில் பாதியைக்கூட கேட்டறிந்ததில்லை என்று எடுத்துக்கூறுகிறார். சேபா அரசியை ஆச்சரியப்படவைத்த சாலமோனின் ஞானப்பண்புகளுள் மிகவும் குறிப்பாக சொல்லப்படுவது இதுதான். “அவர் உண்டுவந்த உணவு வகைகள் அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை...” இவற்றைக் கண்டு அரசி பேச்சற்றுப்போனார் (10:5). ஒரு மனிதன் உயர்ந்தவன், சிறந்தவன், நல்லவன், வல்லவன் என்பது அவன் தனக்குக் கீழ் இருக்கும் மனிதர்களை நடத்தும் பண்பிலிருந்து தெரிகிறது. பேரரசர் சாலமோன் தனது பணியாளர்கள் நன்கு உடுத்த வேண்டும், உண்ண வேண்டும் என்றெல்லாம் விரும்பியுள்ளார். பணியாளர்களுக்கு தாராள மாய் செய்துள்ளார்.
பணியாளர்களுடைய உடை, பழக்க வழக்கங்கள், அர்ப்பணிப்பு இவற்றை வைத்து முதலாளியினுடைய பண்புகளை இங்கே எடைபோடலாம். நமது வீடுகள், அலுவலகங்கள், பங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் இவற்றில் வேலைபார்க்கும் தோட்டக்காரன் போன்ற பணியாளர்கள் எவ்விதம் உடுத்துகிறார்கள்? நியாயமான ஊதியம் தரப்படுகிறதா? இவர்களுடைய மனித மாண்பு மதிக்கப்படுகிறதா? என்பதெல்லாம் சில அடிப்படையான கேள்விகள். ஊரெல்லாம் உயிர்த்த இயேசுவைத் தேடியது போதும், அவர் நாம் வாழும் இடத்திலேயே தோட்டக்காரன் போன்ற எளியவர்களின் தோற்றத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிவோமா?
3. காயங்களால் உண்டான தழும்புகளில் உயிர்த்த இயேசு
யோவான் நற்செய்தி 20:24-29 இல் தோமாவுக்கு தோன்றும் நிகழ்வு இந்தியர்களாகிய நமக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் இந்தியாவுக்கு நற்செய்தி அறிவிக்க தோமாவை அனுப்புவதற்காகவே மிகவும் சிறப்பாக மீண்டும் ஒருமுறையாக இயேசு தோமாவுக்கு தோன்றுகிறார். இந்த நிகழ்வில் உயிர்த்த இயேசு தமது கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைக் காண்பித்து இதோ என் கைகள் இங்கே உன் விரலை இடு, உன் கையை நீட்டி "விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைக்கொள்" என்கிறார். இந்த இடத்தில் நம்மில் பெரும்பாலானோர் செயல்படும் விதம் இயேசுவின் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். இயேசுவின் இடத்தில் நாம் இருந்திருந்தால் தோமாவை அழைத்து “தோமா இதோ இந்தக் காயத்தை ஏற்படுத்தியவன் அவன், என் விலாவைக் குத்தியவன் இவன், என் உடலைத் துளைத்தவன் அதோ அவன் என்றெல்லாம் குற்றப்பட்டியலிட்டு ஆட்களைக் குறித்துக் காண்பித்து பதிலுக்கு பழிக்குப் பழி வாங்கச் சொல்லியிருப்போம். ஆனால், காயங்களால் ஏற்பட்ட தழும்புகளைச் சுட்டிக்காண்பித்து தன் மீது நம்பிக்கைக்கொள்ளும்படியாக உயிர்த்த இயேசு சொல்கிறார். உயிர்த்த இயேசுவின் இன்னொரு அடையாளம் காயப்பட்ட தழும்புகளாகும். எங்கெல்லாம் காயப்பட்ட தழும்புகள் பழிவாங்கத் துடிக்காமல் மன்னிப்பை மனம் உருக வழங்கி தியாகத்தின் சின்னமாய் நிற்கிறதோ அங்கெல்லாம் உயிர்த்த இயேசு இன்றும் உயிர்வாழ்கிறார். நமது உறவுகளில், அன்பியங்களில், குடும்ப நட்புகளில், கொடுக்கல் வாங்கல்களில் உயிர்த்த இயேசுவை எண்பிக்கிறோமா?
4. வழிப்போக்கர்களில் உயிர்த்த இயேசு
லூக்கா நற்செய்தி 24:13-35 இல் எம்மாவு செல்லும் வழியில் சீடர் இருவரை இயேசு சந்திக்கும் நிகழ்வை வாசிக்கிறோம். எருசலேமிலிருந்து எம்மாவு ஏறக்குறைய 11கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ளது. மாலை வேளையில் மேற்கு நோக்கிய இப்பயணத்தில் இயேசு ஒரு வழிப்போக்கராய் உடன் நடக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் உடன் நடந்தும் அந்த வழிப்போக்கர்தான் இயேசு என்று அச்சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. இன்றும் நாம் அறியா வண்ணம் வழிப்போக்கராய் உயிர்த்த இயேசு நம்பாதைகளில், பயணங்களில், வாழ்வில் உடன் வருகிறார். ஆனால், அன்றையச் சீடர்களைப்போல நம்முடனே நடந்து வரும் இயேசுவை நாம்தான் அடையாளம் கண்டுகொள்வதில்லை. (1சாமு 30:11-15) - இல் பேரரசர் தாவீது மனம் உடைந்து தன் எதிரிகளைத் தேடும் பயணத்தில் வழிப்போக்கனாய் குற்றுயிராய் சாலை ஓரம் கிடந்த மனிதனுக்கு உணவும், மருந்தும் கொடுத்து உதவிசெய்கிறார். இறுதியில் அம்மனிதன்தான் எதிரிகளைப்பிடிக்க துருப்புச் சீட்டாய் பயன்படுகிறான் என்று அந்நிகழ்வு சொல்கிறது. பேரரசர் தாவீது அம்மனிதனைக் கண்டுகொள்ளாமல் சென்றிருந்தால் அந்தப் போரில் வெற்றிபெற்றிருக்க இயலாது. நாமும் நமது வாழ்வில் பயணங்களில், பணிகளில் குறுக்கிடும் வழிப்போக்கர்களில் இயேசுவைக் கண்டுகொள்ளத் தெரிய வேண்டும். உறவுதான் வாழ்வு. பயணங்களில் அடுத்திருப்பவர்களிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மௌனமாய் பயனிப்பதில் என்ன சுகமோ? நாட்டு நடப்புகளை, அரசியல் நிகழ்வுகளை அலசிக்கொண்டே அடுத்திருப்பவரிடம் வழிப் போக்கரிடம் உரையாடி மகிழ்வோம். அவர்களிலும் இயேசு உடன் வருவதை அடையாளம் காண்போம்.
5. இறைவார்த்தையில் உயிர்த்த இயேசு
லூக்கா நற்செய்தி 24:4-45 முடிய உள்ள பகுதிகளில் எம்மாவு சென்ற சீடர்கள் வழிப்போக்கராய் வழி நெடுக வந்த இயேசுவோடு உரையாடி வருவதைப் படிக்கிறோம். இந்த உரையாடலில் நாட்டு நிகழ்வுகள் அலசப்படுகின்றன. எதார்த்த வாழ்க்கையிலிருந்து இறைவாக்கு எதிர்பார்ப்புக்கு உரையாடல் பயணம் செய்கிறது. இந்த உரையாடலில் ஆண்டவர் இயேசு “அறிவிலிகளே இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்கு முன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா! என்றார். மேலும், மோசே முதல் இறைவாக்கினர் வரை அனைவரின் நூல்களிலும் தம்மை குறித்து எழுதப்பட்ட யாவற்றிலும் அவர் அவர்களுக்கு விளக்கினார்” (24:25-27) என்று வாசிக்கிறோம்.
இந்த நிகழ்வை எம்மாவிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப் போகும்பொழுது சீடர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? என்று பேசிக்கொண்டார்கள்” (லூக் 24:32) என்றும் வாசிக்கிறோம். இதிலிருந்து நாம் அறியும் பாடம் என்னவெனில் மறைநூலில் உயிர்த்த இயேசு பிரசன்னமாய் இருக்கிறார் என்பதாகும். ஆகவேதான் நமது திருச்சபையில் திருவழிபாட்டில் வாசகங்கள் வாசித்து முடிக்கும் பொழுது “இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு” என்று முழங்குகிறோம். புனித அகுஸ்தினார் கூறுவார்: நான் ஆண்டவரின் குரலை கேட்கிறேன்” இந்த கூற்றில்தான் எவ்வளவு உண்மை அடங்கியுள்ளது! உயிர்த்த இயேசுவை நாம் காண வேண்டுமெனில் நம் உள்ளம் பற்றி எரியும் வண்ணம் மறைநூலை ஆழமாய் வாசித்து தியானிக்க வேண்டும். மறைநூல், அறிவுக்கு விருந்து தரும் நூல் அல்ல. அது உள்ளத்திற்கு மருந்து தரும் இறைவனின் வார்த்தையாகும். உயிர்த்த இயேசுவை அன்றாடம் சந்திக்க விரும்புவோர் நாள்தோறும் தவறாது இறைவார்த்தையை வாசிப்பர். நாம் எப்படி?

Comment